செவ்வாய், 23 டிசம்பர், 2008

நேரமில்லாதபோது

நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் எவ்வளவோ வேலைகளை செய்கிறோம். அத்தனை வேலைகளையும் நாம் நேரம் கணக்கிட்டே செய்கிறோம். அது அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, நம்முடைய சொந்த வேலையாக இருந்தாலும் சரி. நம் வாழ்க்கை காலத்தை ஒட்டியே ஒவ்வொன்றும் கணக்கிடப்படுகின்றது. நம்முடைய வாழ்வில் ஒருவேளை காலத்தை கணக்கிடும் முறை கண்டறியப்படாவிட்டால்...

ஒரு சிறிய கற்பனை!

நாம் எந்த ஒரு வேலையையும் நிதானமாக செய்யலாம். குறிப்பிட்ட நேரத்தில் வேலை முடியவில்லை என்று நம்மை யாரும் குறை சொல்ல முடியாது. மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கும். மனிதர்களிடையே வயது வித்தியாசம் என்பதே இருக்காது. அப்படியென்றால் அனைவரும் நல்ல நட்புடன் செல்பட எதுவாக இருக்கும். நம்முடைய பெரியவர்கள் தாம் வயதால் பெரியவர்கள் என்கிற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களை மட்டம் தட்ட முடியாது.

அலுவலகம் செல்பவர்கள் எந்நேரம் வேண்டுமானாலும் செல்லலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது. அவரவர் தம் பணிகளில் கவனம் செலுத்தி அவற்றை முடித்தால் மட்டும் போதும் என்ற நிலை இருக்கும்.

காலையில் சீக்கிரம் எழுந்திருக்கச்சொல்லி நமது உறக்கத்தினை யாரும் கலைக்க முடியாது. நம்முடைய வாழ்க்கை முழுக்க முழுக்க நம்முடைய விருப்பப்படியே இருக்கும். எந்த ஒரு வலிமையான கட்டுப்பாடும் இருக்காது.

வாழ்க்கையில் முதுமை என்பது உணரப்படாது. வயதே தெரியாதபோது முதுமை எங்கிருந்து வருகிறது? எனவே அனைவரும் மரணம் வரையில் இளமையோடே இருப்பார்கள் அல்லது இருப்பதாக உணரப்படுவார்கள். யாரும் யாரை வேண்டுமானாலும் விரும்பலாம். பெரியவர் சிறியவர் என்ற வேற்றுமை இன்றி அன்பு மட்டுமே நிலைக்கும் தூய்மையான உணர்வுகள் நிலைத்திருக்கும்.

யார் வேண்டுமானாலும் எந்த வகுப்பில் வேண்டுமானாலும் சேரலாம். ஆங்கே அறிவு மட்டுமே மதிப்பிடப்படும். வயது எதுவாக இருந்தாலும் அவர்கள் அறிவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்.

சூரியன்

நானும் ஒரு இரவுச்சூரியன்!

என் இரவுகள் அனைத்தும் புதிய விடியலுக்கே

மாலை நேரங்களில் நான் மறைவதனால்,

நான் ஒளிஇழப்பதும் இல்லை!

ஒழிந்து போவதும் இல்லை!

இரவு, இன்னொரு விடியலின் ஆரம்பம்!

நான் ஓரிடத்தில் மறைந்தாலும்,

போகும் இடமெல்லாம் பகல்களே!

இரவுகள் நிரந்தரமாயிருப்பதில்லை!

சூரியன் இரவுகளில் இறப்பதில்லை!வெள்ளி, 12 டிசம்பர், 2008

பொருளில்லா பொருட்கள்!

நாம் நம்முடைய வாழ்வில் நித்தம் நித்தம் எத்தனையோ செயல்களை செய்கிறோம். அவை அனைத்தும் சரியனவி என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையிலேயே அவை சரியானவையா? எது சரி? எது தவறு?

நமக்கு சரி என்று தோன்றும் ஒரு செயல் மற்றொருவருக்கு தவறாகவே படுகிறது. எடுத்துக்காட்டாக, நம்முடைய பழக்கவழக்கங்கள் நமக்கு சரி என்று பட்டாலும், மேற்கத்திய நாடுகளில் அது ஒரு முட்டாள் தனமாக கருதப்படுகிறது. அவர்கள் செய்யும் எத்தனையோ செயல்கள் நமக்கு தவறாக தெரிகிறது. அவ்வளவு ஏன் நம்மை விட பெரியவர்களுக்கும் நமக்குமே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது!

இப்படிப்பட்ட சூழலில் நாம் நினைப்பதும் நான் செய்வதும் சரி என்பதும் மற்றவர்கள் செய்வது தவறு என்பதும் சற்றே சிந்தித்துப்பார்க்க வேண்டிய கருத்தாகவே இருக்கிறது. நம்முடைய செயல்கள் பிறரை பாதிக்காத வரையில் எல்லாமே சரி என்ற கருதும் சில நேரங்களில் ஏற்க முடியாததாகவே உள்ளது. காரணம், இன்றைய சூழலில் நம்முடைய செயல்கள் ஏதோ ஒரு விதத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இன்னொருவரை பாதிக்கிறது. இது தவிர்க்க முடியாதது. அப்படிப்பட்ட சூழலில் நம்மில் ஒருவரும் சரியானவர் இல்லை. பேருந்தில் ஓடிப்போய் வேகமாக ஏறி இடம் பிடிக்கும்போது ஓட முடியாத மோசமான உடல்நிலையில் இருக்கும் ஒருவரின் இடத்தை நாம் பிடுங்கி விடுகிறோம். அப்படிப்பட்ட சூழலில் நம்முடைய செயல்கள் யாரையும் பாதிப்பதில்லை என்று எப்படி கூற முடியும்?

நம்முடைய வழ்கியாயின் ஒவ்வொரு நொடியிலும் ஏதோ ஒரு பொருள் இருக்கிறது. எந்த மொழியாக இருந்தாலும் அது பொருளில்லாத சொற்களை உடையதாக இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. ஆனால் அந்த சொற்களையும் பொருட்களையும் நாமே உருவாக்குகிறோம். அப்படி இருக்கையில் எந்த ஒரு சொல்லையோ செயலையோ சரி என்றோ தவறு என்றோ நாம் எப்படி முடிவு செய்ய முடியும்?

ஒருவேளை நம் வாழ்வின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பொருள் தருவது நாம்தான் என்றால் அந்த சொற்கள் நமக்கு கட்டுப்பட்டிருக்கவேண்டுமே தவிர நாம் அதற்க்கு கட்டுப்பட்டிருக்கிறோம் என்பதுவே நிதர்சனம்.

பொருள் என்பது பொருளாக கொள்ளப்படவேண்டுமே தவிர அவை நிலையானவை அல்ல என்பதை உணர்வோமாக.