புதன், 2 செப்டம்பர், 2009

கன்னித் தந்தை

திருமணம் ஆகவில்லை,
எந்தப் பெண்ணையும் தீண்டவில்லை,
ஆனாலும் இன்று தந்தை!
தமிழைப் போலவே,
அழுகையும் ஆனந்தம் தந்தது!
பாபிலோனில் மட்டுமா தொங்கும் தோட்டம்?
இங்கு தொட்டிலிலும்தான்!
இவள் பாதங்களே அனிச்சமலரோ?
இந்த இதழ்கள் தான் ரோஜா மொட்டுகளோ?
கண்களில் தான் சின்ன குழப்பம்;
காந்தள் என்பதா? அல்லி என்பதா?
துவாலையைவிட மென்மையாய்
பூக்குடலை போல் உடல்!
கைகளில் அள்ளிக்கொண்டேன்;
பூமாலையா? பூந்தோட்டமா?
புரியாமலே புன்னகைத்தேன்!

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

சுதந்திரம்

சுதந்திரம் உணரப்படுகிறது, ஒவ்வொரு விடுதலை நாளும்!
எப்போதும் பறந்து கொண்டிருக்கும் என் வண்டி, இன்று நிம்மதியாய் ஒரு ஓரத்தில்
தினமும் பொதி சுமக்கும் நம் வீட்டுக்குழந்தை வீட்டுப்பாடம் செய்யவேண்டாம்
சமையலறையில் கபடியாடும் பெண்கள் ஒரு நாள் நிம்மதியாய் தூங்கலாம்
நகரும் சர்க்கஸ் கூடாரமாய் திகழும் பேருந்துகள் காலியாய்
ஞாயிற்றுக்கிழமையில் கூட இல்லாத அளவுக்கு வெறிச்சோடிய சாலைகள்
தேசத்தின் பெயரால் பணம் பார்க்கும் ஊடகங்கள்
பாதி பேர் மட்டுமே வந்த பள்ளி விழாவில் வழங்கப்படும் இனிப்புகள்

இப்போதுதான் உணர்கிறேன்;
இன்று சுதந்திர தினம்!!!

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

வணக்கம்

மூன்று வண்ணப் பட்டுடுத்தி
நீல வண்ண பொட்டு வைத்து
வானுயர விஸ்வரூபம் தந்தாய்;
தலை நிமிர செய்தற்காய் - தாயே
நின்னை தலை வணங்குகிறேன்!

புதன், 1 ஏப்ரல், 2009

விற்கப்பட்டது சுயம்!

ஈராயிரம் ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள்!
என் மூதாதையரெல்லாம் முற்றும் உணர்ந்தவர்கள்;

உலகின் முதல் மக்களாட்சி,
என் சோழனின் கைகளில் குடவோலையாய்!
கிரேக்கமும் யவனமும் வணிகத்திற்காய் வந்துபோனார்கள்,
எம் மன்னர்களின் காலத்தில்!

வணிகத்தின் அடிப்படை மட்டுமன்றி,
வீரவிளையாட்டுகளும் எங்கள் நிலத்தில் விளைந்தன!

அதெல்லாம் அன்று!

என் தாத்தன் காலத்தில் காணாமல் போனது,
தமிழ் மொழியின் தனிச்சிறப்பு மந்திரங்கள்!
என் தாயார் காலத்தில் காணாமல் போனது,
தமிழ் படித்தவனுக்கு வேலை வாய்ப்பு!

என் தலைமுறையில் மறக்கப்பட்டது தாலாட்டு!
எங்களுக்கு தமிழனின் சாப்பாடு கூட பழமைதான்!
வேட்டி கட்டியவன் பழமைவாதியானான்;
புடவை ஆயுளில் ஐந்து முறை மட்டுமே என்றானது,
என் தமிழச்சிக்கு!

கால்களுக்கு ஷூ,
இடுப்புக்கு இருக்கமாய் பெல்ட்,
தொடை பிதுங்கவைக்கும் ஜீன்ஸ்,
இதுதான் இன்றைய நாகரிகம்!

அடுப்பை எரிக்கிறது வெய்யில்;
ஆனாலும் எங்களுக்கு வேண்டும் இறுக்கமான ஆடைகள்!
வியர்க்கும்போது,
சற்றே ஆடைகள் தளர்த்தப்படுகின்றன,
நாகரிகத்தின் பெயரால்!

நற்றமிழ் பேசினால்,
நையாண்டி செய்யும் ஒரு கூட்டம்;

எண்ணிரண்டு மொழி பேசுவர், எழுதுவர்;
தம் தாய்மொழியிலோ பெயர் எழுதவும் அறிந்திலர்!

நாகரிகத்தின் பெயரால்,
பணத்தின் பெயரால்,
பகட்டின் பெயரால்,
அடகுவைக்கப்பட்டது நம் அடையாளங்கள்!

வெள்ளி, 30 ஜனவரி, 2009

தேடல்

எழுதாத கவிதைகள்;
இல்லாத வார்த்தைகள்;
வாழாத மனிதர்கள்;
சூன்யத்தின் மையத்தில்!
சிந்தனையில் தோன்றிடும்
எண்ணங்கள் யாவையும்
எழுதிடத்துடிக்கும் எழுதுகோல் இதயம்!

தேடிக்கொண்டிருக்கிறேன்,
இதயத்தைவிட வேகமான எழுதுகோலையும்,
கோபத்தைவிட கொடுமையான எதிரியையும்!

திங்கள், 5 ஜனவரி, 2009

தனித்தனி நபர் போராட்டம்!

நாம் ஒவ்வொரு நாளும் எத்தனையோ பேரை சந்திக்கிறோம். எவ்வளவோ பேசுகிறோம். நம் வாழ்வில் என்றுமே ஒரு சிலவற்றை நாம் உணர்வதில்லை. நம் கண் முன்னே இந்த உலகம் கெட்டு அழிவதை பார்த்தும் நாம் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. நம்மால் தனி நபராக என்ன செய்ய முடியும் என்று எண்ணி நமக்குள்ளேயே ஒடுங்கிவிடுகிறோம். ஆனால் ஒரு மிக மிக இன்றியமையாத கருத்தை நாம் மறந்து விடுகிறோம். ஒவ்வொரு தனி மனிதனும் சமூகத்தின் ஒரு அங்கம் என்பதுதான் அது.

நம் வாழ்க்கை இந்த சமுதாயத்தை நிச்சயம் பாதிக்கிறது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இந்த சமுதாயத்தின் ஒரு சிறிய பகுதியின் செயலாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் அங்கமே என்பதை உணரவேண்டும்.

எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டபோது பலரும் இதனால் என்ன நிகழும் என்று பேசினார்கள். ஆனால் இன்று சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர இதுவே பெரிதும் காரணம் என்று பலரும் கூறுகின்றனர்.

நாம் தனி மனிதர் இல்லை. தனித்தனியாக நிற்கும் சமுதாயத்தின் ஓர் அங்கமே. நாம் எல்லோரும் மனது வைக்கவேண்டும். சமுதாயம் திருந்தவில்லை, சமுதாயம் கெட்டுவிட்டது என்று புலம்புவதைக்காட்டிலும், நாமும் இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம், இந்த சமுதாயம் கெட்டுபோக நாமும் ஒரு காரணம், நாம் நினைத்தால் இந்த சமுதாயம் மாறும் என்று நாம் நினைக்கத்துவங்க வேண்டும். ஒருவர் புகைப்பதை நிறுத்தினால் தீர்வு கிடைப்பதாகத்தெரியாது. ஆனால் ஒவ்வொருவரும் புகைப்பதை நிறுத்தினால் கண்டிப்பாக நம் காற்று மாசடைவது தடுக்கப்படும். நாம் ஒருவர் மட்டும் இயற்கையை பாதுகாக்க முனைந்தால் அது பெரிய மாற்றத்தை உண்டுபண்ணுவதாகத் தோன்றாது. ஆனால் ஒவ்வொருவரும் முனைந்தால் கண்டிப்பாக மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும். நம் ஒருவருடைய வாழ்க்கை இந்த சமுதாயத்தை மாற்ற முடியாது. ஆனால் நம் ஒவ்வொருவரது வாழ்கையும் நிச்சயம் ஒரு குறிப்பிடத்தக்க மாறுதலை கொணர முடியும்.

எனவே, நண்பர்களே! நம் வாழ்கையின் ஒவ்வொரு பகுதியலும் நற்செயல்கள் நிறைந்தாக மாற்றுவோம்! நல்ல சிந்தனைகளை முடிந்த வரையிலும் பரப்புவோம்! நும்முடைய செயல்கள் நிச்சயம் இந்த சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வரும்! அந்த நம்பிக்கையுடன் நம் வாழ்க்கைப்பயணத்தை தொடர்வோமாக!!!