புதன், 1 ஏப்ரல், 2009

விற்கப்பட்டது சுயம்!

ஈராயிரம் ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள்!
என் மூதாதையரெல்லாம் முற்றும் உணர்ந்தவர்கள்;

உலகின் முதல் மக்களாட்சி,
என் சோழனின் கைகளில் குடவோலையாய்!
கிரேக்கமும் யவனமும் வணிகத்திற்காய் வந்துபோனார்கள்,
எம் மன்னர்களின் காலத்தில்!

வணிகத்தின் அடிப்படை மட்டுமன்றி,
வீரவிளையாட்டுகளும் எங்கள் நிலத்தில் விளைந்தன!

அதெல்லாம் அன்று!

என் தாத்தன் காலத்தில் காணாமல் போனது,
தமிழ் மொழியின் தனிச்சிறப்பு மந்திரங்கள்!
என் தாயார் காலத்தில் காணாமல் போனது,
தமிழ் படித்தவனுக்கு வேலை வாய்ப்பு!

என் தலைமுறையில் மறக்கப்பட்டது தாலாட்டு!
எங்களுக்கு தமிழனின் சாப்பாடு கூட பழமைதான்!
வேட்டி கட்டியவன் பழமைவாதியானான்;
புடவை ஆயுளில் ஐந்து முறை மட்டுமே என்றானது,
என் தமிழச்சிக்கு!

கால்களுக்கு ஷூ,
இடுப்புக்கு இருக்கமாய் பெல்ட்,
தொடை பிதுங்கவைக்கும் ஜீன்ஸ்,
இதுதான் இன்றைய நாகரிகம்!

அடுப்பை எரிக்கிறது வெய்யில்;
ஆனாலும் எங்களுக்கு வேண்டும் இறுக்கமான ஆடைகள்!
வியர்க்கும்போது,
சற்றே ஆடைகள் தளர்த்தப்படுகின்றன,
நாகரிகத்தின் பெயரால்!

நற்றமிழ் பேசினால்,
நையாண்டி செய்யும் ஒரு கூட்டம்;

எண்ணிரண்டு மொழி பேசுவர், எழுதுவர்;
தம் தாய்மொழியிலோ பெயர் எழுதவும் அறிந்திலர்!

நாகரிகத்தின் பெயரால்,
பணத்தின் பெயரால்,
பகட்டின் பெயரால்,
அடகுவைக்கப்பட்டது நம் அடையாளங்கள்!