வெள்ளி, 24 டிசம்பர், 2010

புத்தகக் கடையும் புதியவர்களும்

புத்தகங்கள் நம் தோழர்கள்!
அதனால்தான்
புதிய தோழர்களை விலை கொடுத்து வாங்க
மனசே வருவதில்லை!
இன்று ஏனோ புதிய புத்தகம் படிக்க ஆசை!
புதிய சிந்தனைகள்,
புதிய பார்வைகள்,
கூடவே புதிய புத்தகத்தின் வாசனையும்!
முடிந்த வரை மூச்சிழுத்து
முகர்ந்து பார்க்க ஆசை!
எந்த புத்தகம் என் பணப்பை வழியாக
மூளையின் மூளைக்குள் சென்று சேரும் என
சிந்தித்துக்கொண்டே தேடுகிறேன்!
புத்தகத்தின் பெயரை விட
விலைப்பட்டியல் மிக முக்கியம்!
கூடவே,
வந்திருக்கும் சிலரையும் கவனிக்கத் தவறவில்லை
என் மனசு!
ஒவ்வொரு புத்தகமும் ஒரு புதிய மனிதனை (மனத்தினை)
கண் முன்னால் திரைக்கிழிக்கிறது
புத்தக நண்பர்கள் புதிய மனித மனங்களை காட்டிக்கொடுக்கின்றன.
பணம்  வணிகம், சுயமுன்னேற்றம், இலக்கியம்,
காதல், காமம், இசை என
எத்தனை மனங்கள்,
புத்தகத்தின் வாயிலாய் வெளியே வருகின்றன!
சிறிய விலையில்
பெரிய எழுத்தாளரின்
படிக்க மறந்த புத்தகம் ஒன்று என் கைகளில்!
விலை எதுவும் இல்லாமல்
புதிய மனங்களின் வெளிப்பாடுகள் பல புத்தகமாய் கண் முன்!
என்னையும் சேர்த்து

வியாழன், 9 டிசம்பர், 2010

அரசியல்

மழை என்ன ஆளும் கட்சியா?
தேர்தலுக்கு முன்னால்
சாலையை சுத்தம் செய்கிறது?

மழை என்ன எதிர் கட்சியா?
சாலைகளின் தரத்தை
வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது?

செவ்வாய், 16 நவம்பர், 2010

மைனா - ஒரு பார்வை


கடந்த ஞாயிறு மாலை ஒரு தோழரிடம் இருந்து அழைப்பு வந்தது. சந்தித்து நீண்ட நாட்கள் ஆனதால் நேரில் சந்திக்க நினைத்தோம். அம்பத்தூர் ரயில்வே நிலையம் வந்த நண்பரை வரவேற்று பின் நாங்கள் இருவருமாய் மெதுவாக மார்க்கெட் பகுதியில் நடந்து கொண்டு இருந்தோம். உரையாடலின் ஊடே படம் பார்க்கலாமென யோசித்தபோது, அருகிலேயே மைனா படம் ஓடிக்கொண்டிருந்தது. புதுமுக நாயகன் மட்டுமன்றி கதையும் நன்றாக இருக்குமென சிலர் சொல்லக் கேள்விப்பட்டு ஆர்வமாய் படம் பார்க்க சென்றோம். படத்தின் பாதிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கதையின் ஆரம்பம் முதலே ஒளிப்பதிவு மிக அழகாக அமைக்கப்பட்டு இருக்கிறது. நாகரிகத்தின் கரை படாமல் தூய்மையான கன்னித்தன்மையோடு இயல்பாய் காட்டப்பட்ட பாங்கு அருமை. மலையும், மலைக் கிராமமும் அற்புதமாய் காடுப்பட்டு இருக்கிறது. மலைவாழ் மக்களின் பயண சிரமங்களை இயல்பை எடுத்துக்காட்டி இருக்கிறார் பிரபு சாலமன். 

கதை மெதுவாக பொதுவான கிராமக்கதையாகவே ஆரம்பமாகிறது. சுருளியின் தந்தை, பருத்தி வீரனின் சித்தப்பாவை நினைவு படுத்துகிறார். எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாத காடுமரமாய் வளரும் சுருளி, பணம் சம்பாதிக்க வேலைக்கு போவது, இன்றைய பொருளாதாரம் சார்ந்த சூழல் மாற்றத்தை நன்றாகவே பதிவு செய்கிறது. வளர்ந்த பின்னால் அதே ஜீப் வண்டியில் வேறொரு சிறுவனைப் பார்கிறபோது பெரிய பாதிப்பு அந்த பாத்திரத்தின் மீது ஏற்படாவிட்டாலும், இறுதியில் அந்த சிறுவனே சிறைக்கு வந்து மைனாவின் திருமண செய்தியை கூறும்போது, கதாப்பாத்திரம் எதுவுமே வீணாக்கப்படவில்லை என தோன்றுகிறது.

உதாரித்தனமாய் சுற்றும் அப்பா, தன் மகனை மற்றவர் கேவலப்படுத்தும்போது சண்டைக்கு வருவதும், அந்த நிலையிலும் சுருளி அவரை திட்டுவதும் கொஞ்சம் நாடகத்தனம்.  அதே போல் மதுரைத் தமிழும் சற்று தடுமாறியிருகிறது.

என்னை மிகவும் கவர்ந்த மற்றுமொரு அம்சம், பாத்திரங்கள். தமிழ்ப் படங்களில் பொதுவாக கதாப்பாத்திரங்களில் ஒரே முகத்தை காட்டும் காலத்தில், ஒரு காமெடியனுக்கும் குரூர முகம் உண்டு என்பதை "பெரியகுளம் போனதும் சாப்பாட்டுல விஷம் வெச்சு கொல்றேன்" எனும் ராமைய்யா பாத்திரப் படைப்பில் ஒரு புத்துணர்வை கொடுக்கிறார். படம் மிகவும் அற்புதமான நகர்தலோடு செல்கிறது. தொய்வில்லாமல் பின்னப்பட்ட திரைக்கதை மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து பாத்திரங்களும் வீனக்கப்படாமல் தெளிவாக செதுக்கப்பட்டு இருக்கின்றன. 

காட்சி அமைப்பு நன்றாக இருந்தாலும் கூட, பல இடங்களில், பிற படங்களில் இருந்து கையாளப்பட்டு உள்ளது, சற்றே வருத்தம் அளிக்கிறது. எடுத்துக்காட்டாக, சுருளியின் கனவில், மைனா கையால் தடவிக்கொடுக்கும் காட்சி, பருத்திவீரன் படத்தில் அமைக்கப்பட்டது போலவே உள்ளது. 

படம் முழுவதும் ஒரு ஓட்டம் இருக்கிறதே தவிர, கருத்து சொல்லவில்லை. இதுவே தமிழ்த் திரையில் ஒரு மிகபெரிய மாற்று!

மைனா - படமல்ல, ஒரு பயணம்!

செவ்வாய், 19 அக்டோபர், 2010

இருளில் ஒளிர்ந்த கவிதை

மாலை நேரம்!
மேகமெனும் கருப்பு பைக்கில்
மழைக்காதலன்.
 
மண்மகளை முத்தமிடும் வேகம்!
முதல் தீண்டலிலேயே பூரித்துவிட்ட பெருமூச்சாய்
மண்வாசம்!

மங்கிய விளக்கொளியில்
மழைச் சத்தத்தினூடே
மற்ற சில சத்தங்கள்!
 
மழையை வரவேற்கும்
ஈசல் ரீங்கார எதிரொலி!
 
மழையின் காதலுக்கு
கட்டியம் கூறும் தவளைகள்!
 
தண்ணீர் பிரச்சினை குறைந்த (?)
தருமமிகு சென்னையின் மகிழ்ச்சியொலி!
 
குதூகலமாய் தண்ணீரில்
குதித்து விளையாடும்
குழந்தைகளின் சிரிப்பொலி!
 
பொன்னால் செய்த பொடிமுத்தாய்
பாரதிதாசனை நினைவுபடுத்தும்
குத்துவிளக்கின் குதியாட்டம்!
 
முகம் நிறைய புன்னகையும்,
மனசு நிறைய மகிழ்ச்சியும், மௌனமுமாய்,
 
நானும், தனிமையும்.

வியாழன், 7 அக்டோபர், 2010

இருளில் ஓர் புதிய வெளிச்சம்!

இந்த உலகம் மனித சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியில் பல மாற்றங்களை கண்டுள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைக்காத அளவுக்கு அறிவியல் நமது வாழ்கையை மாற்றிப் போட்டிருக்கிறது. கூடவே சில பாதிப்புகளையும் கொடுத்து இருக்கிறது.

இன்று உலகம் முழுவதும் பலரும் பேசும் ஒரு விஷயமாக மாறியிருக்கிறது 'உலக வெப்பமயமாதல்'!!!

நம்மில் பலரும், என் அனைவருமே நித்தமும் கேட்டுக்கொண்டிருக்கும் விஷயமே என்ற போதிலும் நாமும் அதற்கு ஒரு வகையில் காரணம் என்பதை மறக்க முடியாது. நமது உலகத்தை காத்துக்கொள்ளும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

எக்ஸ்னோரா அமைப்பினர் ஒரு நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வரும் 10ஆம் தேதி இரவு 10 மணி முதல் பத்து நிமிடங்கள்  விளக்குகளை அணைப்பதன் மூலம் பல மடங்கு கார்பன் பயனீட்டு அளவை குறைக்க முடியும் என நம்புகின்றனர். அது உண்மையும் கூட! ஒரு வீட்டில் விளக்கை அனைப்பதல் ஏற்படும் பலன்கள் குறைவே என்றாலும் ஒட்டுமொத்த கூட்டு முயற்சியாக செயல்படும் பட்சத்தில் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். 

அவர்களின் அழைப்பு விளக்குகளை அணைப்பதற்காக என்றாலும், முடிந்தால் அனைத்து மின் பொருட்களையுமே பத்து நிமிடங்கள் அணைத்தாலென்ன என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன். நமது சமூகம் தூய்மையாகவும் அழகாகவும் இருப்பது நமக்குத்தானே நல்லது?

என் வீட்டில் இருட்டுக்குள் ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது. உங்கள் வீட்டில் எப்படி?

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

ஜோசியம் பாக்கலியோ ஜோசியம்!!!

பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி தமிழ் ஈழம் பற்றிய பேச்சுக்களும் மிகக் குறைந்து விட்ட இன்றைய நிலையில், இன்று இணையத்தை துழாவிக்கொண்டு இருந்தபோது திடீரென ஒரு ஜோசியம் கண்ணில் பட்டது. தமிழகத்தின் திரைத்துறை பல்கலை வித்தகர் (?) T . ராஜேந்தர் அவர்களுடைய இணைய தொலைகாட்சித் தளத்தை படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த ஒரு கட்டுரை என்னை கவர்ந்து விட்டது. இறந்து விட்ட அல்லது இறந்ததாக அறிவிக்கப்பட்ட பிரபாகரன் 2012- இல் தமிழீழத்தின் அதிபர் அவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கையின் நிலவரம் என்ன என்பதே கேள்விக்குறியாக உள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் பெருந்தலைகள் பல சரிந்துவிட்ட நிலையில் இந்த கட்டுரை என்னை மிகவும் சிந்திக்க வைக்கிறது.

இதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு என்பது ஒரு புறம் கருதப்படுகிறது. காரணம், இறுதியாக நிகழ்ந்த போர், பல மாற்றங்களைக் கொணர்ந்துள்ளது. மேலும் தமிழ்கள் சமூக அளவில் சிதறி இருக்கும் நிலையில், மீண்டும் அவர்கள் ஒன்று சேர்வது, சமூக அளவிலும் மக்களின் மனதளவிலும் தேவை. அவற்றை ஒருங்கிணைப்பது மிகவும் கடினம் மேலும் காலம் எடுத்துக்கொள்ளும் ஒரு மாபெரும் செயல். இந்த இறுதிப்போர் ஆயுத அளவில் மட்டுமன்றி உளவியல் ரீதியிலும் உலகம் முழுவதும் உள்ள தமிழ்களை பாதித்துள்ளது என்பதை மறக்க முடியாது. மேற்கத்தியப் பாடகரான தமிழர் மியா கூட தன்னுடைய நேர்காணலில் இது குருத்து காலை தெரிவித்தது உலகம் முழுவதும் உள்ள அனைத்து பிரிவு தமிழர்களையும் துளைத்து எடுத்ததற்கு சான்று. மேலும், போரின் வெற்றி, இலங்கை அரசை மனதளவில் பலப்படுத்தி உள்ளது என்றே தோன்றுகிறது.

இருந்தபோதும் கூட, கடந்த காலங்களில் தோல்விக்கு பிறகும் புலிகள் மீண்டு எழுந்திருக்கின்றனர் என்பதையும் மறக்க முடியாது. மேலும் அவ்வப்போது பிரபாகரன் உயிரோடு  இருப்பதாக செய்திகள் அல்லது வதந்திகள் வெளிவருகின்றன.

எது எப்படி இருந்தாலும் பிரபாகரனோ அல்லது இலங்கை அரசோ யாராக இருந்தாலும் மக்களின் மகிழ்ச்சிக்கு வழி பிறக்குமானால், நானும் ஒரு தமிழன் என்ற முறையில் மகிழ்ச்சி அடைவேன்!

வியாழன், 23 செப்டம்பர், 2010

பயணம் - தொடர் பூக்கள்

இனிய நண்பர்களுக்கு,
நம் வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள் நிதம் நிகழ்கின்றன.
வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் தன் பதிவுகளை நம் நினைவுகளில் விட்டு விட்டுச் செல்கிறது. எல்லாருடைய வாழ்வைப் போல் என் வாழ்விலும் பல இடங்களை கடந்திருக்கிறேன். ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு நிகழ்வை என் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயமாய் எடுத்து வந்து கண் முன்னே நிறுத்திவிடுகிறது. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள தொடர் பூக்களாய் / இடுகைகளாய் அளிக்க எத்தனிக்கிறேன்.

விரைவில் ஒவ்வொன்றாய் உங்கள் பார்வைக்கு பூக்கள் மலரும். எதிர்பாருங்கள்! ஒரு பயணத்தின் பகிர்தலை!

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

திங்கள், 18 ஜனவரி, 2010

நம்ம ஊரு சுத்தமாயில்ல!!!

இன்று செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தபொழுது ஒரு முக்கியமான செய்திகண்ணில் பட்டது. இந்த ஆண்டு பொங்கல் தினம் கடற்கரையில் சேர்ந்த குப்பைமட்டும் அறுபது டன்கள்!!!

"ஊரு முழுக்க அழுக்கு, ஊரெல்லாம் குப்பை" இப்படி சொல்லிக்கொண்டுஇருக்கும் நாம் நமது பங்கினை பற்றி சிந்திக்கிறோமா? நம் வீட்டின் குப்பையும்சரி, வெளியில் செல்லும்பொழுது சேரும் குப்பையும் சரி, எந்த வகையில்வெளியேற்றப்படுகிறது?

நம் வீட்டை அலங்கரிக்கும் நாம் நம்முடைய பொது இடங்கள் அசுத்தம்அடைவதை தடுக்க எதாகிலும் செய்திருக்கிறோமா? குறைந்தபட்சம் நாம் குப்பைபோடுவதையாவது நிறுத்திவிட்டோமா? இந்த ஊர் திருந்தாது, இந்த மக்கள்திருந்த மாட்டார்கள் என்று ஜம்பமாக பேசும் நாம், நாம் திருந்தி விட்டோமா என்றுஒரு முறையாவது சிந்தித்ததுண்டா? பல ஊடகங்களிலும் தூய்மை பற்றிபேசிக்கொண்டே இருக்கும்போதும் குப்பைகள் சேர்வதன் காரணம் என்ன? தனிமனித முயற்சி என்ன செய்து விட முடியும்?

ஒரு சிறிய சிந்தனை தோன்றியது.

நம்முடைய சமுதாயம் நம்மைப் போன்ற தனி மனிதர்களின் குழுமம். நாம்ஒவ்வொருவரும் நம்மை சுற்றி இருக்கும் சூழலை தூய்மையாய் வைத்திருக்கவேண்டும் என்பதை உருதுயாய் மேற்கொள்ளவேண்டிய சூழலில் உள்ளோம்.

நம்முடைய குப்பைகளை உரிய முறையில் வெளியேற்றும் கடமை உண்டுஎன்பதை நாம் உணர வேண்டும். நாம் நம்முடைய வீட்டை எவ்வளவுதூய்மையாய் பராமரிக்கிறோமோ அதே அளவு நம்முடைய சூழலும்இன்றியமையாதது. குப்பைகளை தொட்டியில் போடவேண்டும் என்றுவீட்டிலிருந்து வெளியே எடுத்துச்செல்லும் நாம் குப்பைத்தொட்டிக்கு அருகில்கொட்டிவிடுகிறோம். இனியாவது அதை மாற்றிக்கொள்வோம்.

நாம் வெளியில் செல்லும்போது குப்பைகளை கண்ட இடங்களிலும்போடும்போது நமக்கும் இதன் பாதிப்புகள் உண்டு என்பதை நினைவில்கொள்வோம். நாம் ஒருவர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியாது. ஆனால்நாம் ஒவ்வொருவரும் நினைத்தால் சாதிக்க முடியும். நம்முடைய சமுதாயத்தின்தூய்மை நம் கைகளில். உணர்வோம். இந்த சிற்றுரை ஒரு சிந்தனை பகிர்வுமட்டுமே. உங்கள் எண்ணங்களை தொடருங்கள். கருத்துப் பரிமாற்றம்நிகழட்டும்!!!