செவ்வாய், 19 அக்டோபர், 2010

இருளில் ஒளிர்ந்த கவிதை

மாலை நேரம்!
மேகமெனும் கருப்பு பைக்கில்
மழைக்காதலன்.
 
மண்மகளை முத்தமிடும் வேகம்!
முதல் தீண்டலிலேயே பூரித்துவிட்ட பெருமூச்சாய்
மண்வாசம்!

மங்கிய விளக்கொளியில்
மழைச் சத்தத்தினூடே
மற்ற சில சத்தங்கள்!
 
மழையை வரவேற்கும்
ஈசல் ரீங்கார எதிரொலி!
 
மழையின் காதலுக்கு
கட்டியம் கூறும் தவளைகள்!
 
தண்ணீர் பிரச்சினை குறைந்த (?)
தருமமிகு சென்னையின் மகிழ்ச்சியொலி!
 
குதூகலமாய் தண்ணீரில்
குதித்து விளையாடும்
குழந்தைகளின் சிரிப்பொலி!
 
பொன்னால் செய்த பொடிமுத்தாய்
பாரதிதாசனை நினைவுபடுத்தும்
குத்துவிளக்கின் குதியாட்டம்!
 
முகம் நிறைய புன்னகையும்,
மனசு நிறைய மகிழ்ச்சியும், மௌனமுமாய்,
 
நானும், தனிமையும்.

வியாழன், 7 அக்டோபர், 2010

இருளில் ஓர் புதிய வெளிச்சம்!

இந்த உலகம் மனித சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியில் பல மாற்றங்களை கண்டுள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைக்காத அளவுக்கு அறிவியல் நமது வாழ்கையை மாற்றிப் போட்டிருக்கிறது. கூடவே சில பாதிப்புகளையும் கொடுத்து இருக்கிறது.

இன்று உலகம் முழுவதும் பலரும் பேசும் ஒரு விஷயமாக மாறியிருக்கிறது 'உலக வெப்பமயமாதல்'!!!

நம்மில் பலரும், என் அனைவருமே நித்தமும் கேட்டுக்கொண்டிருக்கும் விஷயமே என்ற போதிலும் நாமும் அதற்கு ஒரு வகையில் காரணம் என்பதை மறக்க முடியாது. நமது உலகத்தை காத்துக்கொள்ளும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

எக்ஸ்னோரா அமைப்பினர் ஒரு நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வரும் 10ஆம் தேதி இரவு 10 மணி முதல் பத்து நிமிடங்கள்  விளக்குகளை அணைப்பதன் மூலம் பல மடங்கு கார்பன் பயனீட்டு அளவை குறைக்க முடியும் என நம்புகின்றனர். அது உண்மையும் கூட! ஒரு வீட்டில் விளக்கை அனைப்பதல் ஏற்படும் பலன்கள் குறைவே என்றாலும் ஒட்டுமொத்த கூட்டு முயற்சியாக செயல்படும் பட்சத்தில் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். 

அவர்களின் அழைப்பு விளக்குகளை அணைப்பதற்காக என்றாலும், முடிந்தால் அனைத்து மின் பொருட்களையுமே பத்து நிமிடங்கள் அணைத்தாலென்ன என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன். நமது சமூகம் தூய்மையாகவும் அழகாகவும் இருப்பது நமக்குத்தானே நல்லது?

என் வீட்டில் இருட்டுக்குள் ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது. உங்கள் வீட்டில் எப்படி?