திங்கள், 21 ஜூலை, 2014

வாழ்வதற்காக!!!

பாடம் படித்தேன்;
பட்டம் பெற்றேன்;
பணம் தேடினேன்;

கனவு தொலைத்தேன்;
கவிதை தொலைத்தேன்;
சுயம் கவிழ்த்து,
சும்மா வாழ்கிறேன்!

புன்னகை மறந்தேன்;
புறையோடிப் போன
புண்களையும் புறக்கணித்தேன்;

காலம் மறந்தேன்;
காதல் துறந்தேன்!
கல்யாணம் செய்து கொண்டு
கடமையோடு குடித்தனம் செய்தேன்.
ஆரோக்கியம் தொலைத்து
அலுவல்களில் ஐக்கியமானேன்!

சம்பாதிக்கிறேன்,
வாழ்வதற்காக(?)!!!

ஞாயிறு, 6 ஜூலை, 2014

கண்ணம்மா என் காதலி

எவ்வளவு பறந்தாலும் ,
எங்கே போனாலும் ,
என்ன பேசினாலும் ,
யாரை சந்தித்தாலும் ,
கண்ணுக்குத் தெரியாத கயிறொன்று
என் நினைவுகளை உன்னோடு
கட்டி இழுக்கிறது !
என் நொடிகளில் நிறைந்தவளே ,
என்ன மாயம் செய்தாய் ???

செவ்வாய், 3 ஜூன், 2014

மேக ஓவியம்

எத்தனை முறை பார்த்தாலும்
நித்தம் நித்தம் புதுமையாய்,
மேக ஓவியம் தீட்டப்பட்ட வானம்!

வியாழன், 6 மார்ச், 2014

குழந்தை

 அகன்ற தோள்கள் ;
விரிந்த மார்பு ;
முறுக்கிய மீசை ;

அதன் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது ,
துடைக்க மறந்த  ஐஸ் கிரீம் !

திங்கள், 29 ஜூலை, 2013

மழையில்!!!!

திறந்த வானம்,
மூடிய மேகம்,
நனைந்தது உடல்;
பூத்தது உள்ளம்!

மகிழ்ச்சியுடன் சேர்ந்து
சுவாசத்தின் நீட்சி!
முழுமையாய் இழுத்து
நுரையீரலில் நிறைத்துக்கொண்ட
மண்வாசனை!

சிரித்துக்கொண்டும் சிலிர்த்துக்கொண்டும்
நாட்டியமாடும்  பூக்கள்,
புதியதாய் இலைவிட்ட
சின்னச் செடிகள் !

விளையாடிக் களைத்த குழந்தையாய்
கலைந்து  கரைந்த கோலம்,
மீண்டும் குழந்தையாய் நான் !
மழையில்!!!

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

புதிய முயற்சி

நண்பர்களே!
ஒரு புதிய முயற்சியாக  ஒளிப்பட போட்டியில் பங்கேற்றுள்ளேன். கீழ்கண்ட இணையபக்கத்தில் நான் எடுத்த ஒளிப்படம் உள்ளது. உங்களின் ஒவ்வொரு வோட்டும் ஒரு முயற்சியின் முன்னேற்றம்.

http://thne.ws/VGVGGW

பாருங்கள்! பிடித்திருந்தால் வோட்டு போடுங்கள்!



வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

நட்புக்கு நன்றி!

இதுவரை நான் எவ்வளவோ இந்த வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வருகிறேன். என்றாலும் கூட, ஒரு பதிவிற்கு மட்டும் வாசகர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
அது "உனக்காக ஒரு கவிதை".

என் தோழியின் வீட்டிற்கு எதேச்சையாய் சென்றபொழுது அவர் வீட்டு மொட்டை மாடியில் மனசு முழுக்க எங்கள் சிறிய வயது நாட்களையும், எங்கள் மனம் திறந்த பேச்சுக்களையும் அசைபோட்டுக்கொண்டு இருந்தேன். அப்போது என்னையும் அறியாமல் தோன்றியது இந்த கவிதை. ரஷிய கவிஞன் ருமாஸ் கம்சதோவ் சொன்னது போல், வார்த்தைகள் தாமாக வந்து பேனா முனையில் வழுக்கி காகிதத்தில் நடனமாடின. மனசு லேசாக இருந்தது. அதனாலோ என்னவோ கவிதை இரண்டு நிமிடத்தில் முடிந்து விட்டது. அதற்கு மேல் எழுத முடிய வில்லை. எங்கள் நட்பு இன்று நாங்கள் உலகின் இரு மூலைகளில் இருந்தாலும், எப்பொழுதாவது அத்தி பூத்தாற்போல் பேசினாலும் மனசு முழுவதும் மகிழ்ச்சியை நிரப்பி விடுகிறது.

தோழி! நன்றி!

உன் நட்பிற்கும், நட்பால் மலர்ந்த வாடாமலராய் நிற்கும் கவிதைக்கும்!