ஞாயிறு, 12 ஜூலை, 2020

காத்திருப்பின் தூரம்

இரவு நேரம்.
சுவாசத்தின் சத்தம் மட்டுமே துணை.
காத்திருப்பின் தூரம்
கண்ணாடி சுவர் மட்டும்.
உள்ளே நானும்
வெளியே சென்னையும்.

மடி தேடும் மழலையாய் நான்.


திங்கள், 6 ஜூலை, 2020

சூரிய விளக்கு


சூடேறி சூடேற்றி
வெளிச்சம் மேலேற்றி
வெம்மை வடித்து
வெளிச்சம் குறைத்த
சோடியம் விளக்கு,

சூரியன்.

வெள்ளி, 26 ஜூன், 2020

என்னோடு மோதும் நான் - முரண் 1

முதல் வார்த்தை எழுத
முட்டி மோதுகின்றேன்.

எதை எழுத?

எண்ண(ற்ற) அலைகள்
சொற்சுவர் கரை உடைத்து
வழிந்து வெளிவருகின்றன;
வடிவம் தொலைத்துவிட்டு.

திறந்து திறந்து
மூடி மூடி
தடம் பதித்து சிரிக்கிறது
எழுதுகோலின்  மூடி.

சின்னஞ்சிறு வயதில்
நல்லறம் கற்றுத்தந்து
வளர்ந்தபின் மறக்கச்சொல்கிறது
சாமர்த்திய சமூகம்.

மனசும் அறிவும் வேறாம்.
மனசாட்சி மறுக்கும் செயலை
அறிவு ஏற்கவேண்டும்.

முன்னேறிப்போக
மற்றவன் முதுகில் ஏறினால்
அறிவாளி.
ஏறிவிட்டு ஏற்றிவிட்டால்
ஏமாளி.
எட்டி  உதைத்தால்
அவன்தான் மேதாவி.

எல்லாரும் சமம்
என்றுதான் சொன்னார்கள்.
பழகும்போது பார்வைகள்
பகட்டை மட்டுமே எடை போடுகின்றன.

பள்ளிப்படிப்பு
அறிவளிக்கும் என்றார்கள்.
படித்து முடித்தபின்
எல்லாம் பழையதாகிவிட்டது.

வேலைவரம் பெற
பள்ளிப்படிப்பு பன்னிரண்டாண்டு.
பெற்றவர் மனங்குளிரும்
கல்லூரி மூன்றாண்டு.
மேலதிக வரம்பெற
மற்றுமொரு ஈராண்டு.

பதினேழு ஆண்டுகள் தவமிருந்து
பனிசேர்ந்தால்,
பயிற்சிக்காலம்
 ஓராண்டு.

படிப்பிற்கு பணியென்றால்
பொறியாளனுக்கு ஏன் பிபிஓ?
பயின்று பணியாற்றிவிட்டால்
படிக்க ஏன் பதினேழு ஆண்டுகள்?

பணம் சம்பாதித்தால்
மகிழ்ச்சியாக வாழலாம்.
நான் சரியாகத்தான் எழுதுகிறேனா?
சிரித்தபடி என்னை கடந்துசெல்லும்
பிச்சைக்காரர்.

புன்னகை
தோழமையின் முகவிலாசம்.
தோழமை
பிரதிபலன் இல்லா
அன்பின் அடையாளம்.
நிச்சயமாகவா?

தோளில் கைபோட்ட தோழன்
தட்டிக்கொடுப்பதாய் நினைத்தால்
தோளில் ஊன்றி மேலேறி
கீழிழுத்துக் கால் மிதித்து
மேலேறிச் செல்கிறான்.

விட்டுக்கொடுப்பவர்
கெட்டுப்போனதில்லை.
ஆம்.கெடுவதற்கு ஒன்றுமே இல்லை.

பணம் வாழ்வின் சக்கரமாய்.
அதுவோ,
வாழ்வை நகர்த்தும் தேரோட்டியாய்.

சுயநலம் தவறானது.
பாம்பு தின்னும் ஊரில்
நடுக்கறி எனக்கு.
எது சரி?

தொடர்ந்து மோதுவோம்!

மீண்டெழும் ஒரு கவிஞனின் மறுபயணம்

நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு கவிதை முயற்சி.

நான் வாழ்வில்

கடந்த
சந்தித்த
அதிர்ந்த
பயந்த
சிரித்த

முரண்களை பேனா போனபோக்கில் எழுதும் ஒரு எத்தனிப்பு.
தொடர்களாய் எழுதும் முயற்சி.

என்னோடு மோதும் நான்.


வெள்ளி, 10 மார்ச், 2017

காதல் கடல்

கரையின் காதுகளில் 
கடல் பேசும் காதல் மொழி,
அலை!

திங்கள், 12 டிசம்பர், 2016

கடற்கரையோரம்!!!

கடற்கரையோரம்!
காய்ந்த மணலின் கரையோரம்!
இதயம், இதமாக சிறகுகளை விரித்தது!
அலைகள் குதித்தோடி வந்தது கண்டு 
அனிச்சையாய் உதடு பிரிந்தது!

காற்று வந்து ஸ்பரிசித்த தேகம்,
குளிரை உள்ளுக்குள் இழுத்து அனுபவித்தது!

காணாமல் போன கவிதைகள் 
எழுதுகோல் படைத்த 
எழுத்தோவியமாய்!
என்னுள் இன்று!

மனசு திறந்த இரவு!
மணல் மீது கனவு!
சுதந்திரமாய் ஒரு கிறக்கம்!
சுகமான உறக்கம்!

இந்த இரவு போல் 
இன்னும் இன்னும் வேண்டும்!

கடற்கரையோரம்!
காய்ந்த மணலின் கரையோரம்!

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

திரும்பத்திரும்ப!!!

இப்போது தான் சென்னை விமானநிலையம் வந்தமாதிரி இருக்கிறது! போட்டு வந்த உடை முதல் விமான நிலையத்தில் இமிகிரேஷனில் "ஸ்வீட் சாப்பிடறீங்களா சார்?" என்று தோழமையோடு கேட்ட அந்த அதிகாரி வரை இன்னும் மறக்கவில்லை. அதற்குள் ஓராண்டு என் தாய் மண் கடந்து! மலைப்பாக இருக்கிறது! 

சிறுவயது முதலாக நான் வாழ்ந்த நிலம் தாண்டிய வாழ்க்கை !
பாலை என்று மட்டுமே அறிந்து வேறுதுவும் தெரியாமல் வந்து விட்டு, நெடுநாள் இருப்போமா என்கிற கேள்வியோடு நுழைந்தேன்.

புதிய நாடு !
ஆனால் அதே நட்பு பாராட்டும் ஒமானிய தோழர்கள்!
அவர்களை விட அதிகமாய் பரவி இந்த நாட்டின் வாழ்வோடு ஒட்டிய மலையாளி தோழர்கள்  (தென்னிந்திய என்றால் முதல் கேள்வியே நீ மலபாரியா  என்பதுதான்)!
எம் தமிழ்  செந்தமிழ்  என்று செவியில் தேனூறும் தமிழ் நண்பர்கள்!
என் இந்திய மண்ணை உணரச் செய்யும் சுற்றம்!

இருந்தாலும், என்னதான் ஓடியாடி விளையாடினாலும் அம்மா மடி  போல் வருமா?

மீண்டும் எப்போது வீடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்?
பல்லாண்டு பழகிய தோழமை பார்த்து பேசுவதெப்போது?
தேநீர்க்கடையில் பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே புகைபிடிக்கும் நண்பனை திட்டிக்கொண்டு, விதவிதமான உணவுகளை தேடி தேடி ரசித்துக்கொண்டே தோழமையும் ருசித்து , இருசக்கர வாகனத்தில் ஏகாந்தமாய் காற்றை கிழித்தபடியே தலை முடி பறக்க வண்டி ஒட்டிக்கொண்டு...

நினைவுகள்  உள்ளே செல்லச்செல்ல இதயம் ஏனோ இன்னமும் சென்னையின் கடல் எல்லை தாண்ட மறுக்கிறது!

இந்த ஒரு வருடம் நிறைய சொல்லித்தந்து இருக்கிறது!

தனியாக வாழும் தன்னம்பிக்கை,
பிரிவுகளின் வழியே மீண்டும் மீணடும் வந்து அலை மோதிய உறவுகளின் புன்னகைகள், ஒவ்வொரு முறை முக நூலில் நுழையும்போதும் எந்த தோழன் அல்லது தோழி ஆன்லைனில் இருக்கிறார்கள் என்று தேடும் ஏக்கம், பேசுகிறோயமோ இல்லையோ, அந்த பெயர்களை பார்க்கிற பொழுதே மனசு கடல் தாண்டி போய்  விடுகிறது!

மொழி வாசிக்க தேடல், எழுத ஆர்வம்...

எல்லாம் இருந்த போதும், என்னவோ ஒரு சோம்பேறித்தனம் முடக்கி வைத்து விடுகிறது!

இங்கு நான் மிகவும் மதித்த சில பண்புகளில் ஒன்று, தங்கள் கலாச்சாரத்தின் மீதான பெருமை!

இந்தியர்கள், எகிப்தியர்கள், ஜோர்டானியர்கள், ஒமானியர்கள் என்று பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் இருந்தாலும் அவரவர் கலாச்சாரத்தின் மீதான பற்றுதல் பூரிப்படைய வைக்கிறது! நிறை பேசி இருக்கிறோம்! ஒவ்வொரு கலாச்சாரம் பற்றியும்!

நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் என் எழுத்தின் அடுத்த பயணம் இந்த பதிவின் மூலம் தொடங்க இருக்கிறது!

பகிர்வுகள்  பதிவுகளாய் தொடரும்!