நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் எவ்வளவோ வேலைகளை செய்கிறோம். அத்தனை வேலைகளையும் நாம் நேரம் கணக்கிட்டே செய்கிறோம். அது அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, நம்முடைய சொந்த வேலையாக இருந்தாலும் சரி. நம் வாழ்க்கை காலத்தை ஒட்டியே ஒவ்வொன்றும் கணக்கிடப்படுகின்றது. நம்முடைய வாழ்வில் ஒருவேளை காலத்தை கணக்கிடும் முறை கண்டறியப்படாவிட்டால்...
ஒரு சிறிய கற்பனை!
நாம் எந்த ஒரு வேலையையும் நிதானமாக செய்யலாம். குறிப்பிட்ட நேரத்தில் வேலை முடியவில்லை என்று நம்மை யாரும் குறை சொல்ல முடியாது. மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கும். மனிதர்களிடையே வயது வித்தியாசம் என்பதே இருக்காது. அப்படியென்றால் அனைவரும் நல்ல நட்புடன் செல்பட எதுவாக இருக்கும். நம்முடைய பெரியவர்கள் தாம் வயதால் பெரியவர்கள் என்கிற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களை மட்டம் தட்ட முடியாது.
அலுவலகம் செல்பவர்கள் எந்நேரம் வேண்டுமானாலும் செல்லலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது. அவரவர் தம் பணிகளில் கவனம் செலுத்தி அவற்றை முடித்தால் மட்டும் போதும் என்ற நிலை இருக்கும்.
காலையில் சீக்கிரம் எழுந்திருக்கச்சொல்லி நமது உறக்கத்தினை யாரும் கலைக்க முடியாது. நம்முடைய வாழ்க்கை முழுக்க முழுக்க நம்முடைய விருப்பப்படியே இருக்கும். எந்த ஒரு வலிமையான கட்டுப்பாடும் இருக்காது.
வாழ்க்கையில் முதுமை என்பது உணரப்படாது. வயதே தெரியாதபோது முதுமை எங்கிருந்து வருகிறது? எனவே அனைவரும் மரணம் வரையில் இளமையோடே இருப்பார்கள் அல்லது இருப்பதாக உணரப்படுவார்கள். யாரும் யாரை வேண்டுமானாலும் விரும்பலாம். பெரியவர் சிறியவர் என்ற வேற்றுமை இன்றி அன்பு மட்டுமே நிலைக்கும் தூய்மையான உணர்வுகள் நிலைத்திருக்கும்.
யார் வேண்டுமானாலும் எந்த வகுப்பில் வேண்டுமானாலும் சேரலாம். ஆங்கே அறிவு மட்டுமே மதிப்பிடப்படும். வயது எதுவாக இருந்தாலும் அவர்கள் அறிவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக