திங்கள், 5 ஜனவரி, 2009

தனித்தனி நபர் போராட்டம்!

நாம் ஒவ்வொரு நாளும் எத்தனையோ பேரை சந்திக்கிறோம். எவ்வளவோ பேசுகிறோம். நம் வாழ்வில் என்றுமே ஒரு சிலவற்றை நாம் உணர்வதில்லை. நம் கண் முன்னே இந்த உலகம் கெட்டு அழிவதை பார்த்தும் நாம் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. நம்மால் தனி நபராக என்ன செய்ய முடியும் என்று எண்ணி நமக்குள்ளேயே ஒடுங்கிவிடுகிறோம். ஆனால் ஒரு மிக மிக இன்றியமையாத கருத்தை நாம் மறந்து விடுகிறோம். ஒவ்வொரு தனி மனிதனும் சமூகத்தின் ஒரு அங்கம் என்பதுதான் அது.

நம் வாழ்க்கை இந்த சமுதாயத்தை நிச்சயம் பாதிக்கிறது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இந்த சமுதாயத்தின் ஒரு சிறிய பகுதியின் செயலாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் அங்கமே என்பதை உணரவேண்டும்.

எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டபோது பலரும் இதனால் என்ன நிகழும் என்று பேசினார்கள். ஆனால் இன்று சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர இதுவே பெரிதும் காரணம் என்று பலரும் கூறுகின்றனர்.

நாம் தனி மனிதர் இல்லை. தனித்தனியாக நிற்கும் சமுதாயத்தின் ஓர் அங்கமே. நாம் எல்லோரும் மனது வைக்கவேண்டும். சமுதாயம் திருந்தவில்லை, சமுதாயம் கெட்டுவிட்டது என்று புலம்புவதைக்காட்டிலும், நாமும் இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம், இந்த சமுதாயம் கெட்டுபோக நாமும் ஒரு காரணம், நாம் நினைத்தால் இந்த சமுதாயம் மாறும் என்று நாம் நினைக்கத்துவங்க வேண்டும். ஒருவர் புகைப்பதை நிறுத்தினால் தீர்வு கிடைப்பதாகத்தெரியாது. ஆனால் ஒவ்வொருவரும் புகைப்பதை நிறுத்தினால் கண்டிப்பாக நம் காற்று மாசடைவது தடுக்கப்படும். நாம் ஒருவர் மட்டும் இயற்கையை பாதுகாக்க முனைந்தால் அது பெரிய மாற்றத்தை உண்டுபண்ணுவதாகத் தோன்றாது. ஆனால் ஒவ்வொருவரும் முனைந்தால் கண்டிப்பாக மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும். நம் ஒருவருடைய வாழ்க்கை இந்த சமுதாயத்தை மாற்ற முடியாது. ஆனால் நம் ஒவ்வொருவரது வாழ்கையும் நிச்சயம் ஒரு குறிப்பிடத்தக்க மாறுதலை கொணர முடியும்.

எனவே, நண்பர்களே! நம் வாழ்கையின் ஒவ்வொரு பகுதியலும் நற்செயல்கள் நிறைந்தாக மாற்றுவோம்! நல்ல சிந்தனைகளை முடிந்த வரையிலும் பரப்புவோம்! நும்முடைய செயல்கள் நிச்சயம் இந்த சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வரும்! அந்த நம்பிக்கையுடன் நம் வாழ்க்கைப்பயணத்தை தொடர்வோமாக!!!

கருத்துகள் இல்லை: