செவ்வாய், 28 செப்டம்பர், 2010

ஜோசியம் பாக்கலியோ ஜோசியம்!!!

பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி தமிழ் ஈழம் பற்றிய பேச்சுக்களும் மிகக் குறைந்து விட்ட இன்றைய நிலையில், இன்று இணையத்தை துழாவிக்கொண்டு இருந்தபோது திடீரென ஒரு ஜோசியம் கண்ணில் பட்டது. தமிழகத்தின் திரைத்துறை பல்கலை வித்தகர் (?) T . ராஜேந்தர் அவர்களுடைய இணைய தொலைகாட்சித் தளத்தை படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த ஒரு கட்டுரை என்னை கவர்ந்து விட்டது. இறந்து விட்ட அல்லது இறந்ததாக அறிவிக்கப்பட்ட பிரபாகரன் 2012- இல் தமிழீழத்தின் அதிபர் அவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கையின் நிலவரம் என்ன என்பதே கேள்விக்குறியாக உள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் பெருந்தலைகள் பல சரிந்துவிட்ட நிலையில் இந்த கட்டுரை என்னை மிகவும் சிந்திக்க வைக்கிறது.

இதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு என்பது ஒரு புறம் கருதப்படுகிறது. காரணம், இறுதியாக நிகழ்ந்த போர், பல மாற்றங்களைக் கொணர்ந்துள்ளது. மேலும் தமிழ்கள் சமூக அளவில் சிதறி இருக்கும் நிலையில், மீண்டும் அவர்கள் ஒன்று சேர்வது, சமூக அளவிலும் மக்களின் மனதளவிலும் தேவை. அவற்றை ஒருங்கிணைப்பது மிகவும் கடினம் மேலும் காலம் எடுத்துக்கொள்ளும் ஒரு மாபெரும் செயல். இந்த இறுதிப்போர் ஆயுத அளவில் மட்டுமன்றி உளவியல் ரீதியிலும் உலகம் முழுவதும் உள்ள தமிழ்களை பாதித்துள்ளது என்பதை மறக்க முடியாது. மேற்கத்தியப் பாடகரான தமிழர் மியா கூட தன்னுடைய நேர்காணலில் இது குருத்து காலை தெரிவித்தது உலகம் முழுவதும் உள்ள அனைத்து பிரிவு தமிழர்களையும் துளைத்து எடுத்ததற்கு சான்று. மேலும், போரின் வெற்றி, இலங்கை அரசை மனதளவில் பலப்படுத்தி உள்ளது என்றே தோன்றுகிறது.

இருந்தபோதும் கூட, கடந்த காலங்களில் தோல்விக்கு பிறகும் புலிகள் மீண்டு எழுந்திருக்கின்றனர் என்பதையும் மறக்க முடியாது. மேலும் அவ்வப்போது பிரபாகரன் உயிரோடு  இருப்பதாக செய்திகள் அல்லது வதந்திகள் வெளிவருகின்றன.

எது எப்படி இருந்தாலும் பிரபாகரனோ அல்லது இலங்கை அரசோ யாராக இருந்தாலும் மக்களின் மகிழ்ச்சிக்கு வழி பிறக்குமானால், நானும் ஒரு தமிழன் என்ற முறையில் மகிழ்ச்சி அடைவேன்!

வியாழன், 23 செப்டம்பர், 2010

பயணம் - தொடர் பூக்கள்

இனிய நண்பர்களுக்கு,
நம் வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள் நிதம் நிகழ்கின்றன.
வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் தன் பதிவுகளை நம் நினைவுகளில் விட்டு விட்டுச் செல்கிறது. எல்லாருடைய வாழ்வைப் போல் என் வாழ்விலும் பல இடங்களை கடந்திருக்கிறேன். ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு நிகழ்வை என் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயமாய் எடுத்து வந்து கண் முன்னே நிறுத்திவிடுகிறது. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள தொடர் பூக்களாய் / இடுகைகளாய் அளிக்க எத்தனிக்கிறேன்.

விரைவில் ஒவ்வொன்றாய் உங்கள் பார்வைக்கு பூக்கள் மலரும். எதிர்பாருங்கள்! ஒரு பயணத்தின் பகிர்தலை!

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

திங்கள், 18 ஜனவரி, 2010

நம்ம ஊரு சுத்தமாயில்ல!!!

இன்று செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தபொழுது ஒரு முக்கியமான செய்திகண்ணில் பட்டது. இந்த ஆண்டு பொங்கல் தினம் கடற்கரையில் சேர்ந்த குப்பைமட்டும் அறுபது டன்கள்!!!

"ஊரு முழுக்க அழுக்கு, ஊரெல்லாம் குப்பை" இப்படி சொல்லிக்கொண்டுஇருக்கும் நாம் நமது பங்கினை பற்றி சிந்திக்கிறோமா? நம் வீட்டின் குப்பையும்சரி, வெளியில் செல்லும்பொழுது சேரும் குப்பையும் சரி, எந்த வகையில்வெளியேற்றப்படுகிறது?

நம் வீட்டை அலங்கரிக்கும் நாம் நம்முடைய பொது இடங்கள் அசுத்தம்அடைவதை தடுக்க எதாகிலும் செய்திருக்கிறோமா? குறைந்தபட்சம் நாம் குப்பைபோடுவதையாவது நிறுத்திவிட்டோமா? இந்த ஊர் திருந்தாது, இந்த மக்கள்திருந்த மாட்டார்கள் என்று ஜம்பமாக பேசும் நாம், நாம் திருந்தி விட்டோமா என்றுஒரு முறையாவது சிந்தித்ததுண்டா? பல ஊடகங்களிலும் தூய்மை பற்றிபேசிக்கொண்டே இருக்கும்போதும் குப்பைகள் சேர்வதன் காரணம் என்ன? தனிமனித முயற்சி என்ன செய்து விட முடியும்?

ஒரு சிறிய சிந்தனை தோன்றியது.

நம்முடைய சமுதாயம் நம்மைப் போன்ற தனி மனிதர்களின் குழுமம். நாம்ஒவ்வொருவரும் நம்மை சுற்றி இருக்கும் சூழலை தூய்மையாய் வைத்திருக்கவேண்டும் என்பதை உருதுயாய் மேற்கொள்ளவேண்டிய சூழலில் உள்ளோம்.

நம்முடைய குப்பைகளை உரிய முறையில் வெளியேற்றும் கடமை உண்டுஎன்பதை நாம் உணர வேண்டும். நாம் நம்முடைய வீட்டை எவ்வளவுதூய்மையாய் பராமரிக்கிறோமோ அதே அளவு நம்முடைய சூழலும்இன்றியமையாதது. குப்பைகளை தொட்டியில் போடவேண்டும் என்றுவீட்டிலிருந்து வெளியே எடுத்துச்செல்லும் நாம் குப்பைத்தொட்டிக்கு அருகில்கொட்டிவிடுகிறோம். இனியாவது அதை மாற்றிக்கொள்வோம்.

நாம் வெளியில் செல்லும்போது குப்பைகளை கண்ட இடங்களிலும்போடும்போது நமக்கும் இதன் பாதிப்புகள் உண்டு என்பதை நினைவில்கொள்வோம். நாம் ஒருவர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியாது. ஆனால்நாம் ஒவ்வொருவரும் நினைத்தால் சாதிக்க முடியும். நம்முடைய சமுதாயத்தின்தூய்மை நம் கைகளில். உணர்வோம். இந்த சிற்றுரை ஒரு சிந்தனை பகிர்வுமட்டுமே. உங்கள் எண்ணங்களை தொடருங்கள். கருத்துப் பரிமாற்றம்நிகழட்டும்!!!

புதன், 2 செப்டம்பர், 2009

கன்னித் தந்தை

திருமணம் ஆகவில்லை,
எந்தப் பெண்ணையும் தீண்டவில்லை,
ஆனாலும் இன்று தந்தை!
தமிழைப் போலவே,
அழுகையும் ஆனந்தம் தந்தது!
பாபிலோனில் மட்டுமா தொங்கும் தோட்டம்?
இங்கு தொட்டிலிலும்தான்!
இவள் பாதங்களே அனிச்சமலரோ?
இந்த இதழ்கள் தான் ரோஜா மொட்டுகளோ?
கண்களில் தான் சின்ன குழப்பம்;
காந்தள் என்பதா? அல்லி என்பதா?
துவாலையைவிட மென்மையாய்
பூக்குடலை போல் உடல்!
கைகளில் அள்ளிக்கொண்டேன்;
பூமாலையா? பூந்தோட்டமா?
புரியாமலே புன்னகைத்தேன்!

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

சுதந்திரம்

சுதந்திரம் உணரப்படுகிறது, ஒவ்வொரு விடுதலை நாளும்!
எப்போதும் பறந்து கொண்டிருக்கும் என் வண்டி, இன்று நிம்மதியாய் ஒரு ஓரத்தில்
தினமும் பொதி சுமக்கும் நம் வீட்டுக்குழந்தை வீட்டுப்பாடம் செய்யவேண்டாம்
சமையலறையில் கபடியாடும் பெண்கள் ஒரு நாள் நிம்மதியாய் தூங்கலாம்
நகரும் சர்க்கஸ் கூடாரமாய் திகழும் பேருந்துகள் காலியாய்
ஞாயிற்றுக்கிழமையில் கூட இல்லாத அளவுக்கு வெறிச்சோடிய சாலைகள்
தேசத்தின் பெயரால் பணம் பார்க்கும் ஊடகங்கள்
பாதி பேர் மட்டுமே வந்த பள்ளி விழாவில் வழங்கப்படும் இனிப்புகள்

இப்போதுதான் உணர்கிறேன்;
இன்று சுதந்திர தினம்!!!

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

வணக்கம்

மூன்று வண்ணப் பட்டுடுத்தி
நீல வண்ண பொட்டு வைத்து
வானுயர விஸ்வரூபம் தந்தாய்;
தலை நிமிர செய்தற்காய் - தாயே
நின்னை தலை வணங்குகிறேன்!