வெள்ளி, 10 மார்ச், 2017

காதல் கடல்

கரையின் காதுகளில் 
கடல் பேசும் காதல் மொழி,
அலை!

திங்கள், 12 டிசம்பர், 2016

கடற்கரையோரம்!!!

கடற்கரையோரம்!
காய்ந்த மணலின் கரையோரம்!
இதயம், இதமாக சிறகுகளை விரித்தது!
அலைகள் குதித்தோடி வந்தது கண்டு 
அனிச்சையாய் உதடு பிரிந்தது!

காற்று வந்து ஸ்பரிசித்த தேகம்,
குளிரை உள்ளுக்குள் இழுத்து அனுபவித்தது!

காணாமல் போன கவிதைகள் 
எழுதுகோல் படைத்த 
எழுத்தோவியமாய்!
என்னுள் இன்று!

மனசு திறந்த இரவு!
மணல் மீது கனவு!
சுதந்திரமாய் ஒரு கிறக்கம்!
சுகமான உறக்கம்!

இந்த இரவு போல் 
இன்னும் இன்னும் வேண்டும்!

கடற்கரையோரம்!
காய்ந்த மணலின் கரையோரம்!

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

திரும்பத்திரும்ப!!!

இப்போது தான் சென்னை விமானநிலையம் வந்தமாதிரி இருக்கிறது! போட்டு வந்த உடை முதல் விமான நிலையத்தில் இமிகிரேஷனில் "ஸ்வீட் சாப்பிடறீங்களா சார்?" என்று தோழமையோடு கேட்ட அந்த அதிகாரி வரை இன்னும் மறக்கவில்லை. அதற்குள் ஓராண்டு என் தாய் மண் கடந்து! மலைப்பாக இருக்கிறது! 

சிறுவயது முதலாக நான் வாழ்ந்த நிலம் தாண்டிய வாழ்க்கை !
பாலை என்று மட்டுமே அறிந்து வேறுதுவும் தெரியாமல் வந்து விட்டு, நெடுநாள் இருப்போமா என்கிற கேள்வியோடு நுழைந்தேன்.

புதிய நாடு !
ஆனால் அதே நட்பு பாராட்டும் ஒமானிய தோழர்கள்!
அவர்களை விட அதிகமாய் பரவி இந்த நாட்டின் வாழ்வோடு ஒட்டிய மலையாளி தோழர்கள்  (தென்னிந்திய என்றால் முதல் கேள்வியே நீ மலபாரியா  என்பதுதான்)!
எம் தமிழ்  செந்தமிழ்  என்று செவியில் தேனூறும் தமிழ் நண்பர்கள்!
என் இந்திய மண்ணை உணரச் செய்யும் சுற்றம்!

இருந்தாலும், என்னதான் ஓடியாடி விளையாடினாலும் அம்மா மடி  போல் வருமா?

மீண்டும் எப்போது வீடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்?
பல்லாண்டு பழகிய தோழமை பார்த்து பேசுவதெப்போது?
தேநீர்க்கடையில் பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே புகைபிடிக்கும் நண்பனை திட்டிக்கொண்டு, விதவிதமான உணவுகளை தேடி தேடி ரசித்துக்கொண்டே தோழமையும் ருசித்து , இருசக்கர வாகனத்தில் ஏகாந்தமாய் காற்றை கிழித்தபடியே தலை முடி பறக்க வண்டி ஒட்டிக்கொண்டு...

நினைவுகள்  உள்ளே செல்லச்செல்ல இதயம் ஏனோ இன்னமும் சென்னையின் கடல் எல்லை தாண்ட மறுக்கிறது!

இந்த ஒரு வருடம் நிறைய சொல்லித்தந்து இருக்கிறது!

தனியாக வாழும் தன்னம்பிக்கை,
பிரிவுகளின் வழியே மீண்டும் மீணடும் வந்து அலை மோதிய உறவுகளின் புன்னகைகள், ஒவ்வொரு முறை முக நூலில் நுழையும்போதும் எந்த தோழன் அல்லது தோழி ஆன்லைனில் இருக்கிறார்கள் என்று தேடும் ஏக்கம், பேசுகிறோயமோ இல்லையோ, அந்த பெயர்களை பார்க்கிற பொழுதே மனசு கடல் தாண்டி போய்  விடுகிறது!

மொழி வாசிக்க தேடல், எழுத ஆர்வம்...

எல்லாம் இருந்த போதும், என்னவோ ஒரு சோம்பேறித்தனம் முடக்கி வைத்து விடுகிறது!

இங்கு நான் மிகவும் மதித்த சில பண்புகளில் ஒன்று, தங்கள் கலாச்சாரத்தின் மீதான பெருமை!

இந்தியர்கள், எகிப்தியர்கள், ஜோர்டானியர்கள், ஒமானியர்கள் என்று பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் இருந்தாலும் அவரவர் கலாச்சாரத்தின் மீதான பற்றுதல் பூரிப்படைய வைக்கிறது! நிறை பேசி இருக்கிறோம்! ஒவ்வொரு கலாச்சாரம் பற்றியும்!

நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் என் எழுத்தின் அடுத்த பயணம் இந்த பதிவின் மூலம் தொடங்க இருக்கிறது!

பகிர்வுகள்  பதிவுகளாய் தொடரும்!

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

பிரிவோம்! சந்திப்போம்!

திரைகடல்  ஓடி
திரவியம் தேடுகிறேன்!

நீ இல்லாத இந்த தலையணை 
இப்போதும் உன்னை சொல்கிறது!

என்  தோள்களில் பதிந்து 
உன்னை சொல்லிக்கொண்டே இருக்கும் 
அந்த தோடுகளின் தடங்கள்!

விமானம் முன்னால் பறக்க 
இதயம் உன்னோடு ஜன்னல் வழியே 
பேசிக்கொண்டிருகிறது!

உன்னைப்  பிரிந்து  இன்று 
இன்னும் இன்னும் 
உள்ளுக்குள் உன்னை
நிரப்பிக் கொள்கிறேன்!

எல்லாமாய் எனக்கு நீ!
எப்போதும் உன் நினைவுகளோடு
நான்!

பிரிவோம்! சந்திப்போம்!
சேமித்து வை உன் காதலை,
நீயோ நானோ 
கடல் தாண்டும் வரை!

வியாழன், 2 ஏப்ரல், 2015

வேலை

அதிகாலை  எழுந்தவன்
அத்தனை பணியும் முடித்து
விரைந்து வீடு சேர்ந்தான்;

சூரியன் அஸ்தமனம்!

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

இருள்

இரவுகளை ரசித்ததுண்டா?
இருளை ரசித்ததுண்டா?
உன்னைச் சுற்றி உலகமே இருந்தாலும்
உனக்கென்ற தனி உலகம்
உருவாவதை உணர்ந்ததுண்டா?

உன் உலகத்தில் நீ நீயாக
சுதந்திரமாய் பறந்து
புதுசாய் சுவாசித்ததுண்டா?

உன்னை உன் உண்மையை
உனக்கே வெளிப்படுத்திய
கண்ணாடியை பார்த்ததுண்டா?

இருள் பயமல்ல!
இருள் பாவமல்ல!
இருள் பாக்கியம்!

இருளை ரசித்துப்பார்!
அது உனக்குள்
புது வெளிச்சம் போடும்!

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

பெண்கள் நாட்டின் கண்கள்!

கருவிலே கொன்று புதைத்தோம்!
தப்பியதை புணர்ந்து புதைத்தோம்!
வளர்ந்தபின் வன்மையாய் புணர்ந்தோம்!
வீட்டிற்கு விளக்கென்று  சொல்லி எரித்தோம்!

நம் கண்ணை நாமே குத்திக்கொண்டோம்!
குத்தியது நாமே ஆயினும்,
என்னவோ கண்களுக்குதான்!

பெண்கள் நாட்டின் கண்கள்!