செவ்வாய், 16 நவம்பர், 2010

மைனா - ஒரு பார்வை


கடந்த ஞாயிறு மாலை ஒரு தோழரிடம் இருந்து அழைப்பு வந்தது. சந்தித்து நீண்ட நாட்கள் ஆனதால் நேரில் சந்திக்க நினைத்தோம். அம்பத்தூர் ரயில்வே நிலையம் வந்த நண்பரை வரவேற்று பின் நாங்கள் இருவருமாய் மெதுவாக மார்க்கெட் பகுதியில் நடந்து கொண்டு இருந்தோம். உரையாடலின் ஊடே படம் பார்க்கலாமென யோசித்தபோது, அருகிலேயே மைனா படம் ஓடிக்கொண்டிருந்தது. புதுமுக நாயகன் மட்டுமன்றி கதையும் நன்றாக இருக்குமென சிலர் சொல்லக் கேள்விப்பட்டு ஆர்வமாய் படம் பார்க்க சென்றோம். படத்தின் பாதிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கதையின் ஆரம்பம் முதலே ஒளிப்பதிவு மிக அழகாக அமைக்கப்பட்டு இருக்கிறது. நாகரிகத்தின் கரை படாமல் தூய்மையான கன்னித்தன்மையோடு இயல்பாய் காட்டப்பட்ட பாங்கு அருமை. மலையும், மலைக் கிராமமும் அற்புதமாய் காடுப்பட்டு இருக்கிறது. மலைவாழ் மக்களின் பயண சிரமங்களை இயல்பை எடுத்துக்காட்டி இருக்கிறார் பிரபு சாலமன். 

கதை மெதுவாக பொதுவான கிராமக்கதையாகவே ஆரம்பமாகிறது. சுருளியின் தந்தை, பருத்தி வீரனின் சித்தப்பாவை நினைவு படுத்துகிறார். எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாத காடுமரமாய் வளரும் சுருளி, பணம் சம்பாதிக்க வேலைக்கு போவது, இன்றைய பொருளாதாரம் சார்ந்த சூழல் மாற்றத்தை நன்றாகவே பதிவு செய்கிறது. வளர்ந்த பின்னால் அதே ஜீப் வண்டியில் வேறொரு சிறுவனைப் பார்கிறபோது பெரிய பாதிப்பு அந்த பாத்திரத்தின் மீது ஏற்படாவிட்டாலும், இறுதியில் அந்த சிறுவனே சிறைக்கு வந்து மைனாவின் திருமண செய்தியை கூறும்போது, கதாப்பாத்திரம் எதுவுமே வீணாக்கப்படவில்லை என தோன்றுகிறது.

உதாரித்தனமாய் சுற்றும் அப்பா, தன் மகனை மற்றவர் கேவலப்படுத்தும்போது சண்டைக்கு வருவதும், அந்த நிலையிலும் சுருளி அவரை திட்டுவதும் கொஞ்சம் நாடகத்தனம்.  அதே போல் மதுரைத் தமிழும் சற்று தடுமாறியிருகிறது.

என்னை மிகவும் கவர்ந்த மற்றுமொரு அம்சம், பாத்திரங்கள். தமிழ்ப் படங்களில் பொதுவாக கதாப்பாத்திரங்களில் ஒரே முகத்தை காட்டும் காலத்தில், ஒரு காமெடியனுக்கும் குரூர முகம் உண்டு என்பதை "பெரியகுளம் போனதும் சாப்பாட்டுல விஷம் வெச்சு கொல்றேன்" எனும் ராமைய்யா பாத்திரப் படைப்பில் ஒரு புத்துணர்வை கொடுக்கிறார். படம் மிகவும் அற்புதமான நகர்தலோடு செல்கிறது. தொய்வில்லாமல் பின்னப்பட்ட திரைக்கதை மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து பாத்திரங்களும் வீனக்கப்படாமல் தெளிவாக செதுக்கப்பட்டு இருக்கின்றன. 

காட்சி அமைப்பு நன்றாக இருந்தாலும் கூட, பல இடங்களில், பிற படங்களில் இருந்து கையாளப்பட்டு உள்ளது, சற்றே வருத்தம் அளிக்கிறது. எடுத்துக்காட்டாக, சுருளியின் கனவில், மைனா கையால் தடவிக்கொடுக்கும் காட்சி, பருத்திவீரன் படத்தில் அமைக்கப்பட்டது போலவே உள்ளது. 

படம் முழுவதும் ஒரு ஓட்டம் இருக்கிறதே தவிர, கருத்து சொல்லவில்லை. இதுவே தமிழ்த் திரையில் ஒரு மிகபெரிய மாற்று!

மைனா - படமல்ல, ஒரு பயணம்!