புதன், 1 ஏப்ரல், 2009

விற்கப்பட்டது சுயம்!

ஈராயிரம் ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள்!
என் மூதாதையரெல்லாம் முற்றும் உணர்ந்தவர்கள்;

உலகின் முதல் மக்களாட்சி,
என் சோழனின் கைகளில் குடவோலையாய்!
கிரேக்கமும் யவனமும் வணிகத்திற்காய் வந்துபோனார்கள்,
எம் மன்னர்களின் காலத்தில்!

வணிகத்தின் அடிப்படை மட்டுமன்றி,
வீரவிளையாட்டுகளும் எங்கள் நிலத்தில் விளைந்தன!

அதெல்லாம் அன்று!

என் தாத்தன் காலத்தில் காணாமல் போனது,
தமிழ் மொழியின் தனிச்சிறப்பு மந்திரங்கள்!
என் தாயார் காலத்தில் காணாமல் போனது,
தமிழ் படித்தவனுக்கு வேலை வாய்ப்பு!

என் தலைமுறையில் மறக்கப்பட்டது தாலாட்டு!
எங்களுக்கு தமிழனின் சாப்பாடு கூட பழமைதான்!
வேட்டி கட்டியவன் பழமைவாதியானான்;
புடவை ஆயுளில் ஐந்து முறை மட்டுமே என்றானது,
என் தமிழச்சிக்கு!

கால்களுக்கு ஷூ,
இடுப்புக்கு இருக்கமாய் பெல்ட்,
தொடை பிதுங்கவைக்கும் ஜீன்ஸ்,
இதுதான் இன்றைய நாகரிகம்!

அடுப்பை எரிக்கிறது வெய்யில்;
ஆனாலும் எங்களுக்கு வேண்டும் இறுக்கமான ஆடைகள்!
வியர்க்கும்போது,
சற்றே ஆடைகள் தளர்த்தப்படுகின்றன,
நாகரிகத்தின் பெயரால்!

நற்றமிழ் பேசினால்,
நையாண்டி செய்யும் ஒரு கூட்டம்;

எண்ணிரண்டு மொழி பேசுவர், எழுதுவர்;
தம் தாய்மொழியிலோ பெயர் எழுதவும் அறிந்திலர்!

நாகரிகத்தின் பெயரால்,
பணத்தின் பெயரால்,
பகட்டின் பெயரால்,
அடகுவைக்கப்பட்டது நம் அடையாளங்கள்!

2 கருத்துகள்:

பாலாஜி சொன்னது…

அறிமுகம் ஏதுமின்றி விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.இந்தக் கவிதையில் மொழி நடை நன்றாக வந்துள்ளது.ஆனால் உள்ளடக்கத்தில் எனக்கு சில முரண்பபடுகள் உள்ளன.அதை இங்கு பதிவு செய்கிறேன்.முதலாவதாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நம்மிடம் உள்ள சில விஷயங்களை இங்கு பகிர விரும்புகிறேன்.நம்மிடையே சாதி பேதங்கள் நிறைய இருந்தன.வருணாசிரம முறை கடைபிடிக்கப்பட்டது.ஒரு குடையின் கீழ் இல்லாமல் எல்லா அரசுகளும் துண்டு துண்டாக இருந்தன.ஜீன்ஸ் டி சட்டை அணிவதில் தவறொன்றுமில்லை என்பது என் கருத்து.மேலும் ஆங்கிலேயர் வருமுன் நம்மிடம் ரவிக்கை அணியும் பழக்கம் கிடையாது.முகலாயர் வருமுன் நம்மிடம் சட்டைப் பொத்தான்கள் கிடையாது.மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை.சமூகம் தன் வசதிக்கேற்ப தேவையானதை எடுத்துக் கொண்டு முன்னகர்ந்து செல்கிறது.அப்படி முன்னகர்ந்த சமூகம் தான் பிரெஞ்சு,இத்தலிய மற்றும் ஏனய சமூகங்கள்.ஆணுக்கும் பென்ணுக்கும் வெவ்வேறான உடைகளை தந்து சென்றது ஆங்கிலேயர்கள்.பெண்களின் உடைகளில் கட்டுப்பாடுகள் விதிப்பது பெண்ணடிமைத்தனத்தின் முதல் படி.இதற்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர்கள்.அவர்கள் மாறி விட்டார்கள்.ஆனால் நாம் மாறவில்லை.ஒரு மொழியின் வளர்ச்சி அதன் தற்போதய இலக்கியப் பயன்பாட்டு வளர்ச்சியையே வைத்தே முடிவு செய்யப்படுகிறது.நம்மைவிட இளைய மொழியான மலையாளம் இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்படுவதற்கு இதுவே காரணம்.எனவே பழம்பெருமை பேசித் திரியாமல் நம் மொழி வளர்ச்சிக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும்.அதற்கு நம் மொழியின் திசையை அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.மேலும் மொழியின் திரிபுகள் தவிர்க்க முடியாதவை.பல வடமொழிச் சொற்கள் தமிழில் உண்டு,வடமொழியிலும் தமிழ்ச் சொற்கள் உண்டு.நாம் தமிழை வளர்க்க நற்றமிழில் பேச வேண்டும் என்பதில்லை.நாகரீகம் என்பது நாளுக்கு நாள் மாறக் கூடியது.அது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாறியே தீரும்.அது தவறன்று.மேலும் இன்று தவறுஎன்பது நாளை தவறாகப் பார்க்கப் படாது.இதற்கு உதாரணம் விதவைகள் மொட்டையடித்து காவி உடை தரிப்பது.சமூகம் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது.தன் முகத்தை காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்கிறது.படைப்புகள் சமூகத்தை மறு உற்பத்தி செய்வதோடு சமூகத்தில் நிலவும் பல தளங்களுக்குள் புரிந்துணர்வை (அழகியலுடன்) ஏற்படுத்துகிறது.அதுவே படைப்பின் வேலை(அழகியலுக்கு அடுத்தபடியாக) என நான் கருதுகிறேன்.

பின் தொடரும்
விவாதங்களுடன்
இரா.பாலாஜி

சிந்தனைகளின் குழந்தை நான்! சொன்னது…

எந்த ஒரு செயலும் அது நம் இயல்பான வாழ்வை பதிக்காத வரை தவறாக தெரிவதில்லை. தங்களுடைய கருத்துக்கள் மிகவும் ஏற்புக்குரியவையே. எனினும், இந்த நாட்டில் நம் வாழ்வு எந்த அளவுக்கு மாறியிருக்கிறது? எது நமக்கு வசதியாக இருக்கிறது? ஜீன்ஸ் அணிவது தவறு அன்று. ஆனால், அதை எப்படி அணிகிறோம் என்பதுதான் மிகவும் இன்றியமையாதது. வசதியாக இருந்தாலும், ஆரோகியம் என்று சிந்திக்கிற பொழுது பருத்தி ஆடைகள் அணிவது நலம். ஜீன்ஸ் வியர்வையை வெளிஎற்றுகிறதா என்கிற கேள்வி எழுகிறபோது இல்லை என்பதே பெரும்பாலும் வருகிறது. மேலும் வாழ்க்கை எப்பொழுது மகிழ்ச்சியடைகிறது? முழுமையை பெறுகிறபோது மட்டுமே. அந்த நிலை எத்தனை மனிதர்களிடம் இருக்கிறது? இப்படிப்பட்ட பலவித கேள்விகளின் வெளிப்பாடே இக்கவிதை.